கொவிட் பரவல் காரணமாக பல வித இன்னல்களுக்கு மத்தியில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், இதற்கு எப்போது முடிவு என்ற நிச்சயமின்மை ஒரு புறமிருக்க, தொடராக பிள்ளைகளின் கல்வி பாதிப்படையக் கூடாது, என்ற காரணத்திற்காக கடன் பட்டாவது தொலைபேசி வாங்கிக் கொடுத்து தமது பிள்ளைகளின் இணைய வழி கற்றலுக்கு பெற்றோர் அடித்தளமிட்டுள்ளனர்.
நிகழ்நிலை கல்வி, இணைய கல்வி என்பன முக்கியத்தும் பெற்றுள்ள நிலைமையில், மாற்றுவழி இல்லாத நிலைமையில், அது தான் தற்போதைய ஒரே தீர்வாக அமைந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் எட்டாக் கனியாக இருந்த தொலைபேசி, கணினி இணையம் என்பவை இன்று அநேக மாணவர்களின் கைகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் மாணவர்களை பிழையான வழியின் பால் இட்டுச் செல்லும் முக்கியமான இரண்டு விடயங்களை இங்கு குறிப்பிட வேண்டும்.
1. ஆபாசக் காட்சிகள், தவறான தொடர்புகள்
கைகளில் இணைய வசதியுடன் தொலைபேசியும் கிடைத்து விட்டால், ஆபாச படங்கள் பார்ப்பது, தவறான நட்புகளை தேடிக் கொள்வது, ஆபாச படங்களை பகிர்ந்து கொள்வது, தனது நிர்வாண, அரை நிர்வாண படங்களை பகிர்ந்து கொண்டு, பின் அதை அடிப்படையாக வைத்த அச்சுறுத்தல்களுக்கு அடி பணிந்து மேலும் பல தவறுகள் செய்து வழி தவறும் சந்தர்ப்பம்.
இதில் ஆண் பெண் இருபாலரும் சிக்கிக் கொண்டாலும், கடும் பாதிப்புக்கும், நிரக்கதி நிலைக்கும் உள்ளாகுபவர்கள் பெண்கள் ஆவர்.
இது தொடர்பில் பெற்றோர்கள் அறிந்து வைத்துள்ளனர்.
2. இணைய விளையாட்டுக்கள்
முதலில் குறிப்பிடப்பட்ட விடயம் தொடர்பில் அநேகர் தெரிந்து வைத்திருப்பதுடன், அது தொடர்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கையான விடயங்களை கையாளும் நிலை உண்டு.
எனினும் கணினி அல்லது மொபைல் விளையாட்டுக்களில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பில் அநேகர் அக்கறை கொள்வது இல்லை. இங்கு பெருமளவு பாதிக்கப்படுவது ஆண் பிள்ளைகள். தம்மை அறியாமலே ஒரு அடிமையாதல் நிலைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பிள்ளை போனில் விளையாடுகிறது என்றால் அசட்டையாக செல்லும் பெற்றோர் அதிகமாகக் காணப்படுகின்றனர். Games தானே விளையாடுகிறார். வேற பெரிதாக தப்பு ஏதும் செய்யவில்லையே, வீட்ல இருந்து கொண்டும் ஒரே படிக்கவா முடியும். ஏதும் வேலைகள் செய்யத் தானே வேணும். நேரமும் போகணுமே எனும் பொடுபோக்குகள் அவர்களை இவ்வலையில் சிக்கச் செய்கின்றன.
இங்கு நாம் இணைத்திருப்பது இன்றைய (04 செப்ரம்பர் 2021) தினமின நாளிதழில் வௌியாகிய செய்தியின் மொழிபெயர்ப்பு.
வீட்டில் உள்ள பொருட்களை இரகசியமாக விற்று மாணவன் ஒருவன் இணைய விளையாட்டுக்கள் விளையாடியுள்ளார் என்ற தலைப்பில் வௌியாகியுள்ளது.
தனது பெற்றோர் வௌிநாட்டில் வசிக்க, பாட்டன், பாட்டியுடன் வீட்டில் வசித்து வந்த 18 வயதுடைய மாணவன், இணைய விளையாட்டுக்களுக்கு அடிமையாகி, வீட்டில் இருந்த இலட்சக்கணக்கான தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை இரகசியமாக விற்றமை தொடர்பில் 03 செப்ரம்பர் 2021 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
க.பொ.த உயர்தர படிப்புக்களுக்காக கணினியினை பயன்படுத்தும் அதே வேளை, பணம் கொடுத்து விளையாடும் இணைய விளையாட்டுக்களில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து விளையாட அவ்விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார்.
வீட்டில் இருந்து திடீரென காணாமல் போன மோட்டார் சைக்கிள் தொடர்பாக தேடியறிந்த போதே மாணவனின் இந்த நடவடிக்கை வௌிச்சத்துக்கு வந்துள்ளது.
இதை ஒரு பத்திரிகை செய்தியாக வாசித்து விட்டு செல்லாது, மாணவர்கள் கையில் தொலைபேசி எடுப்பது தொடர்பில் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.
முடியுமான சந்தர்ப்பங்களில் அவர்கள் கணினி அல்லது தொலைபேசியில் கற்கும் போது அருகே இருப்பது அல்லது குறைந்தது அடிக்கடி அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று சிறிது நேரம் அங்கு சென்று பார்ப்பது மிகக் கட்டாயம் ஆகும்.
முன்பு இணைய விளையாட்டுக்கள் தொடர்பிலான கட்டணங்கள் Credit Card, Debit Card மூலம் செலுத்தப்பட வேண்டி இருந்தது. தற்போது மொபைல் சிம்மிலிருந்தும் கொடுப்பனவுகள் மேற்கொள்ள வசதிகள் காணப்படுகின்றன.
தொலைபேசி பாவனை, விளையாடும் விளையாட்டுக்கள், Data செலவு மற்றும் தொலைபேசி கட்டணப் பட்டியல் அல்லது தொலைசேி கட்டண அறவீடுகள் தொடர்பில் பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு என்று தனித் தொலைபேசி வாங்கிக் கொடுப்பது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படல் வேண்டும்.
வெறுமனே இதை வாசித்து விட்டு இருக்காது, உங்கள் பிள்ளை மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தாலும் சரி, அவர்கள் தொலைபேசி பாவிக்கும் போது அருகில் இருந்து அவதானிக்க கரிசனை கொள்ளுங்கள்.
வெறுமனே அவர்களுக்கு தொலைபேசி அல்லது கணினியினை வழங்கிவிட்டு, அவர்களை சுயாதீனமாக விடும் போது, அவர்கள் செல்லும் பாதை முற்றிலும் வேறுபட்டு செல்வதுடன், அவர்களை மீட்டெடுக்க கடும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதுடன், அது இலகுவான காரியமுமல்ல.
மீண்டும் ஒரு நினைவுபடுத்தல். இதனை வெறுமனே ஒரு சம்பவமாக பார்க்காது, நமது வீட்டில் நடைபெற போகிறது என்ற கண்ணோட்டத்தில் செயற்படல் வேண்டும். நாளை பார்ப்போம், எமக்கு வேலைப்பழு அதிகம் என்று விட்டுவிட்டால் பின்னர் பெரும் கைசேதத்திற்கு உள்ளாகுவோம். எமது பிள்ளைகளை மாத்திரமல்லாது, உறவினர்களின் பிள்ளைகள் தொடர்பிலும் நாம் சிரத்தை காட்டுவது, பெற்றோர்கள் இது தொடர்பில் தேடியறிந்து கொள்வது முக்கியமாகும்.
கையடக்கத் தொலைபேசியும், பிள்ளைகளும் என்ற தொனிப்பொருளில் பேராசிரியர் ஒருவரும், விரிவுரையாளர் ஒருவரும் (வைத்தியர்கள்) வழங்கிய வழிகாட்டல்கள் பின்வரும் இணைப்பில் உண்டு
0 கருத்துகள்