சமையல் எரிவாயு தொடர்பில் பிரதமர் இன்று தெரிவித்தவை
ஜூலை 09 ஆம் திகதி எரிவாயு நாட்டுக்கு கிடைக்கப் பெற்றதும், ஜூலை 11 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் எரிவாயு விநியோகிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜூலை 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இரண்டு நாட்களுக்குள் கொழும்பு மாநகரம் முழுவதும் 140 இடங்களுக்கு தலா 100 வீதம், கிலோ 12 கிலோ எடையுள்ள சிலின்டர்கள் 1,40,000 விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
அதன் பின்னர் கொழும்பு நகருக்கு 12.5 கிலோகிராம் சிலிண்டர்கள் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் என்றும், சிறு பரிமாண வியாபாரங்களுக்கும் எரிவாயு விநியோகிக்கப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
ஜூலை 11 முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை 33000 மெட்ரிக் தொன் எரிவாயு பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
எரிபொருள் தொடர்பில் இன்று அறிவிக்கப்பட்டவை
எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் எரிபொருள் கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழு நேற்று இரவு அனுமதி வழங்கியதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சில அரசியல் குழுக்கள் நாட்டைப் பற்றிய தவறான கருத்துக்களை சமூகமயப்படுத்துவதால், எரிபொருள் விநியோகஸ்தர்களும் நாட்டிற்கு எரிபொருளை வழங்க மறுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஐ.ஓ.சி நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் முதலாவது எரிபொருள் கப்பல் எதிர்வரும் 22 அல்லது 23 ஆம் திகதி வரவுள்ளதாகவும், அது நாட்டிற்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ள எரிபொருள் கப்பல் எனவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
ஆனால் நேற்றிரவு ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் கப்பலின் விலை வழமையான விலையை விட அதிகமாக இருந்ததாகவும், அது மட்டுமே எரிபொருளை வழங்க தயாராக உள்ளதாகவும், மக்களுக்கு எரிபொருளை வழங்குவது அவசியம் என்பதால், அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
எரிபொருளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் அரசியல் தலையீடுகள் இருக்காது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
அதிக விலைக்கு எரிபொருள் கிடைக்காவிட்டால் எதிர்வரும் 22ஆம் திகதி வரை பொறுத்திருக்க வேண்டும் என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு இல்லாததாலும், உரிய நேரத்தில் பணம் செலுத்த முடியாததாலும், நாட்டில் எரிபொருள் விநியோகஸ்தர் பற்றாக்குறை நிலவுவதாகவும், இந்த நாட்களில் முறையான கொள்முதல் முறையின் மூலம் ஏலம் கோரப்பட்டாலும் எவரும் எரிபொருளுக்கான விலைமனுக்களை கோரவில்லை என்றும் அமைச்சர் கூறினார். .
நாட்டிலுள்ள பிரதான எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு 800 மில்லியன் டொலர்களுக்கு மேல் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
0 கருத்துகள்